அட்சய திரிதியை நாளை ஒட்டி சென்னை வண்டலூர் அருகில் உள்ள ரத்னமங்கலம் குபேரர் கோவிலில் லட்சுமி குபேரர் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்.

 

அட்சய திரிதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. இன்றைய தினம் நாம் செய்யும் நற்காரியங்கள் மேன் மேலும் வளரும் என்பது ஐதீகம். சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் அட்சய திரிதியை நாளாகும். இதன் சிறப்புகள் பற்றி பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

 

அட்சய திரிதியை சிறப்பு

 

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தான் இழந்த சங்க நிதி, பதும நிதிகளை பெற்றது அட்சய திரிதியை நாளில்தான். பாண்டவர்கள் வன வாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில்தான். அதேபோல் மணிமேகலையும் இந்த நாளில்தான் அட்சய பாத்திரம் பெற்றுள்ளார். அனைத்து வளங்களையும் இழந்து பிச்சாடனரான சிவபெருமான் தன் கையில் இருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடம் இருந்து உணவு பெற்று பிரமகத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாள்தான்.

 

கனகதாரா ஸ்தோத்திரம்

 

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண்ணுக்கு தங்க நெல்லிக்கனி மழை பெய்ய வைத்த நாளும் அட்சய திரிதியை நாள்தான்.

 

கிருஷ்ணா அவதாரத்தில் குசேலர் அளித்த அவலை சாப்பிட்டு அவரை செல்வத்திற்கு அதிபதியாக உயர்த்திய நாளும் இந்த நாள்தான்.

 

குபேரன் மகிமை

 

செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும்.

 

குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படையும் என்பது நம்பிக்கை. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.

 

வெளிநாடுகளில் குபேரன்

 

இந்தியாவைப் போல ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் குபேரனை ‘ சிரிக்கும் கடவுளாக’ வணங்குகின்றனர். புத்த மதத்திலும் குபேர வழிபாடு உள்ளதால் சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர். மதங்கள் வேறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். குபேரரைப் போல குள்ளமான உருவம், தொப்பை, கையில் கலசம், பொன்முட்டை ஆபரணங்கள் என சிரிக்கும் புத்தருக்கும் உள்ளது.

 

அட்சய திரிதியை அன்று குபேர அம்சத்தை வணங்கினால் வேண்டிய அளவிற்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே அன்றைக்கு குபேரரை வழிபடுவதைப் போல ஏழைகளுக்கு இயன்ற அளவிற்கு தானம் செய்யுங்கள் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.