வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடை பெறவுள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என, யாழ். மாவட்ட ​செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். திருவிழாவுக்காக, 200 பொலிஸார் பாதுகாப்பு சேவையில் ஈடுபடவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதையடுத்து, இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

 

“திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கச்சதீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

திருவிழாவுக்கான ஒழுங்களுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதேபோன்று, ஏனைய துறையினர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதன் படி, தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி நிரந்தர மலசலகூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

 

மேலும், “எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பஸ் சேவை அதிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரை நடைபெறும். அதேபோன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5.00 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச் சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

 

அத்துடன், சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டப் பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது. பயணிகள் பாதுகாப்பு அங்கி அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை, பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது, கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும்” எனவும் தெரிவித்தார்.